விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: பா.ம.க வேட்பாளர் அறிவிப்பு
|விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த 10-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
சென்னை,
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி. கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த 10-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர்.அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் பாஜக கூட்டணியில் பா.ம.க போட்டியிடும் என்று அண்ணாமலை நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி பா.ம.க வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி போட்டியிடுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.அன்புமணி கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். 2016 -ஆம் ஆம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதியில் பாமக தனித்து களமிறங்கியது.
இதில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி 41,428 வாக்குகள் பெற்று 3-ஆம் இடம் பிடித்தார். திமுக சார்பில் போட்டியிட்ட ராதாமணி 63,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.வேலு 58,845 வாக்குகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.