தமிழக வெற்றிக் கழக எக்ஸ் தள பக்கத்தின் முகப்பு படம் மாற்றம்
|தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் தள பக்கத்தில் விஜய்யின் முகப்பு படம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். கட்சியின் பெயரை அறிவித்தது தொடங்கி அவரை விமர்சனக் கணைகள் சூழ்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி விஜய் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப்பாடலை அறிமுகப்படுத்தினார்.
கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய போதும் விஜய் பல சர்ச்சைகளை சந்திக்க வேண்டி இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தை பயன்படுத்தி இருப்பதாக அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. மேலும் தங்கள் அமைப்பின் கொடியை பயன்படுத்துவதாக சில சாதிய அமைப்புகள் விஜய்க்கு எதிராக பேசின.
தொடர்ந்து மாநாடு தொடர்பாகவும் விஜய் சில பிரச்சினைகளை எதிர்கொண்டார். பல இடங்களில் மாநாட்டுக்காக இடம் பார்த்து சரியான இடம் அமையாத நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் மாநாடு நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்று விஜய் அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தார்.
ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. கடந்த 17-ம் தேதி பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதற்கு பா.ஜ.க. அவரை விமர்சித்தது. அதே நேரத்தில் திருமாவளவன் உள்ளிட்ட பலர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தின் முகப்பு படம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக நெற்றியில் பொட்டு வைத்து சிரித்த முகத்துடன் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் முகப்பு படமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பொட்டு இல்லாமல் விஜய் கையெடுத்து கும்பிடுவது போன்ற புகைப்படம் முகப்பு படமாக மாற்றப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது, பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது உள்ளிட்டவை பேசுபொருளான நிலையில், தற்போது பொட்டு வைத்த புகைப்படம் மாற்றப்பட்டு இருப்பது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.