விக்கிரவாண்டியில் விஜய்யின் முதல் மாநாடு?
|விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு செப்.22-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை,
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். 2026 சட்டசபை தேர்தல்தான் இலக்கு என்று கூறி உள்ளார். இதற்கிடையே கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடிகர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கட்சியின் முதல் மாநாடு வருகிற செப். 22 அல்லது 26 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இதற்காக விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் கட்சி தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
மாநாடுக்கு ஒருநாள் முன்னதாகவே விழுப்புரத்திற்கு வரும் விஜய், அங்கேயே தங்கியிருந்து மாநாடுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை மேற்கொள்கிறார் எனவும் மாநாட்டை மாலை 3 மணிக்குத் தொடங்கவும், மாலை 6 மணிக்கு விஜய் உரை நிகழ்த்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழர்கள் நலன் சார்ந்தும், உரிமை சார்ந்தும் 18 தீர்மானங்கள் வரை மாநாட்டில் நிறைவேற்ற ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய அரசைக் கண்டித்தும் சில தீர்மானங்கள் இடம்பெறலாம் என கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.