< Back
மாநில செய்திகள்
ஒரு பெற்றோராக, தலைவராக எனக்கே அச்சமூட்டுகிறது - போதைப்பொருள் பயன்பாடு குறித்து விஜய் பேச்சு
மாநில செய்திகள்

"ஒரு பெற்றோராக, தலைவராக எனக்கே அச்சமூட்டுகிறது" - போதைப்பொருள் பயன்பாடு குறித்து விஜய் பேச்சு

தினத்தந்தி
|
28 Jun 2024 12:12 PM IST

Say No To Temporary Pleasures, Say No To Drugs என மாணவர்களை விஜய் உறுதிமொழி ஏற்கவைத்தார்.

சென்னை,

கடந்தாண்டு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சி இந்திய அளவில் மிகுந்த பாராட்டைப் பெற்றது. இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கினார்.

தொடர்ந்து சினிமா, அரசியல் என பயணப்பட்டு வரும் அவர் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2ஆம் ஆண்டாக மாணவ, மாணவியர்களை கவுரவித்து வருகிறார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் விழாவில் பங்கேற்க அதிகாலையிலேயே விஜய் வருகை தந்தார். இன்று நடக்கும் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, தேனி, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி,சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், "எதிர்கால சந்ததிகளான மாணவ, மாணவியரை சந்திப்பதில் மகிழ்ச்சி. சாதனை படைத்த மாணவர்களை பார்க்கும் போது புதிய உத்வேகம் கிடைக்கிறது. அது இன்று காலை முதல் எனக்குள் வேலை செய்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் எல்லோரும் அடுத்த ஒரு கட்டம், உங்கள் கேரியரை தேர்வு செய்யும் நிலைக்கு செல்கிறீர்கள்.

உங்களில் சிலருக்கு அடுத்த நிலை பற்றிய தெளிவான முடிவு இருக்கும். சிலருக்கு குழப்பம் இருக்கும். எல்லா துறைகளும் நல்ல துறைகள்தான். நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்களோ அதில் நீங்கள் 100 சதவிகிதம் உழைப்பு போட்டால் வெற்றி நிச்சயம். இதுதொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், துறை சார்ந்த நிபுணர்களிடம் பேசுங்கள்.

தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் மட்டும் நல்ல படிப்புகள் என்று சொல்லிவிட முடியாது. உலக அளவில் துறை சார்ந்த சிறந்தவர்கள் இருக்கிறார். தற்போது நமக்கு நல்ல தலைவர்கள்தான் தேவை. நான் அரசியல் ரீதியாக மட்டும் சொல்லவில்லை. படிப்பு துறைகள் ரீதியாகவும் சொல்கிறேன். எதிர்காலத்தில் அரசியலும் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் துறை ரீதியான தேர்வாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டுமா? வேண்டாமா?. நன்கு படித்தவர்கள் தலைவராக வர வேண்டுமா? வேண்டாமா?. இப்போதைக்கு படியுங்கள், மீதியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது தொடர்கதை அல்ல.

படிக்கும்போது நீங்கள் மறைமுகமாக அரசியலில் ஈடுபடலாம். ஒரு செய்தியை தகவல் வேறு, கருத்து வேறு என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். சோசியல் மீடியாவில் சிலர் புரளி பேசுகிறார்கள். அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாதீர்கள். நல்லவர்களை கெட்டவர்கள் போலவும், கெட்டவர்களை நல்லவர்கள் போலவும் சித்தரிக்கிறார்கள். வரும் செய்திகளில் எது உண்மை, எது பொய் என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பது தந்தை என்ற முறையில் எனக்கு அச்சமாக உள்ளது. உங்கள் நண்பர்கள் யாராவது தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் திருத்தப்பாருங்கள். நீங்கள் ஒருபோதும் தவறான பழக்கங்களில் ஈடுபடாதீர்கள்.

இந்த போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது, இளைஞர்களை அதிலிருந்து மீட்பதெல்லாம் அரசின் கடமை என சொல்லலாம். இப்போது ஆளும் அரசு அதை தவற விட்டுவிட்டார்கள் என்பதெல்லாம் நான் பேச வரவில்லை. அதற்கான மேடை இதில்லை. சில சமயம் அரசாங்கத்தை விட நம்முடைய வாழ்க்கையை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்முடைய பாதுகாப்பு நம் கையில் தான் உள்ளது. சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள்" என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து "Say no to temporary pleasures, Say no to drugs" என அனைவரையும் விஜய் உறுதிமொழி எடுத்துக்கொள்ள செய்தார்.

பின்னர் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2ஆம் ஆண்டாக மாணவ, மாணவியர்களை கவுரவித்து மாணவ, மாணவியருக்கு வைர மோதிரம் மற்றும் 5,000 மதிப்பிலான காசோலையை விஜய் வழங்கினார்.



மேலும் செய்திகள்