< Back
மாநில செய்திகள்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
மாநில செய்திகள்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

தினத்தந்தி
|
29 Aug 2024 5:26 AM IST

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வேளாங்கண்ணி,

வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஏசுவின் தாயாக கருதப்படும் மாதா கையில் குழந்தை ஏசுவுடன் காட்சி தருகிறார். பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தளமாக இந்த பேராலயம் விளங்குகிறது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டிற்கான பேராலய திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தம்புராஜ் திருக்கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.

அடுத்த மாதம் செப்டம்பர் 8-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறும். விழா நாட்களில் தினமும் மாலையில் தேர் பவனி நடைபெறுகிறது. இந்த தேர்பவனி பேராலயத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரை வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடையும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி அடுத்த மாதம்(செப்டம்பர்) 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. அதை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தம்புராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பேராலயத்தின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். திருவிழாயொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்