கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை குறைந்தது
|காய்கறிகள் வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை குறைந்துள்ளது.
சென்னை,
சென்னை கோயம்பேடு, மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. காய்கறிகள் வரத்து அதிகரிப்பால் கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மொத்த விற்பனையில் வரி கத்தரிக்காய் கிலோ ரூ.10-க்கும், அவரைக்காய் மற்றும் கொத்தவரங்காய் கிலோ ரூ.15-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.10-க்கும் விற்பனை ஆகி வருகிறது. பீன்ஸ் மற்றும் ஊட்டி கேரட் கிலோ ரூ.50-க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து தக்காளி ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரையிலும், நாசிக் வெங்காயம் ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.55 வரையிலும் விற்கப்படுகிறது. வரத்து குறைவால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை விபரம் வருமாறு (கிலோவில்):-உஜாலா கத்தரிக்காய்-ரூ.30, பன்னீர் பாகற்காய்-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.25, பச்சை மிளகாய்-ரூ.15, முட்டை கோஸ் ரூ.12, புடலங்காய்-ரூ.10, சுரக்காய்-ரூ.8.