வி.சி.க. மது ஒழிப்பு மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்பு?
|மது ஒழிப்பு மாநாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சிமாவட்டம் உளுந்தூர் பேட்டையில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அ.தி.மு.க. மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த மாநாட்டில் அ.தி.மு.க. நிச்சயம் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் நடிகர் விஜய் கட்சியை பொறுத்தவரை உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. ஒருவேளை நடிகர் விஜய் அதில் கலந்து கொள்ளாவிட்டாலும், அவரது கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம் அல்லது அவர் மாநாட்டிற்கு வாழ்த்து செய்தி அனுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மது ஒழிப்பு மாநாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. திருமாவளவனை பொறுத்தவரை மாநாடு வேறு, அரசியல் வேறு என்று கூறிய நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.