உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் மலை பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
அவர்கள் கீழே இறங்கி வர முயன்றபோது, வழியில் கற்கள் விழுந்தன. இதனால், அவர்கள் திரும்பி வர முடியாத நிலையில் உள்ளனர். இதனால், ஹெலிகாப்டர் மூலம் 30 பேரும் மீட்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் கடலூரின் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான திருமிகு. பராசக்தி அவர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்!"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.