த.வெ.க. மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து மாவட்ட காவல்துறை ஆலோசனை
|காவல் துறையினர் கேட்ட 21 கேள்விகளுக்கும் த.வெ.க. சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார்.
அந்த கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றிருந்தன. மேலும் தமிழக வெற்றிக் கழக பாடலையும் விஜய் அறிமுகப்படுத்தினார்.
த.வெ.க.,வின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடத்த அனுமதி கோரி, அக்கட்சியின் நிர்வாகிகள் கடந்த 28ல், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அன்று மாலையே ஏ.டி.எஸ்.பி., திருமால் தலைமையில் போலீஸ் குழுவினர், மாநாடு நடத்த த.வெ.க.,வினர் தேர்வு செய்திருந்த இடத்தை பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து, மாநாட்டின் நிகழ்ச்சி நிரல், பாதுகாப்பு ஏற்பாடு, மாநாட்டிற்கு வருவோரின் எண்ணிக்கை உள்ளிட்ட 21 கேள்விகள் கேட்டு, விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷ், கடந்த 2ல் அக்கட்சி நிர்வாகிக்கு நோட்டீஸ் வழங்கினார்.
காவல் துறையினர் கேட்ட 21 கேள்விகளுக்கும் த.வெ.க. சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை தொடர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மாநாட்டிற்கு அனுமதி அளிப்பது குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.