< Back
மாநில செய்திகள்
ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மாநில செய்திகள்

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தினத்தந்தி
|
15 Sept 2024 8:02 PM IST

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பென்னாகரம்,

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்த நிலையில் மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதுடன், காவிரி ஆற்றில் பாய்ந்து ஓடுகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் சுற்றுலா பயணிகள், மக்கள் குளிக்க மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்துள்ளார்.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாபயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்