2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியானது
|அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது.
சென்னை,
அரசு துறைகளில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நடத்தி வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. இதற்கான ஆண்டு தேர்வு கால அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
* குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும், தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியாகும் எனவும், தேர்வு அடுத்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகும் எனவும், தேர்வு ஜூலை 13-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.