< Back
மாநில செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜனுடன் அண்ணாமலை சந்திப்பு
மாநில செய்திகள்

தமிழிசை சவுந்தரராஜனுடன் அண்ணாமலை சந்திப்பு

தினத்தந்தி
|
14 Jun 2024 3:56 PM IST

தமிழிசை சவுந்தரராஜனை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.

சென்னை,

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். அவர் நிகழ்ச்சி மேடையில் இருந்த பா.ஜ.க. தலைவர்களுக்கு வணக்கம் அளித்தபடி சென்றபோது அங்கிருந்த உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து விரலை நீட்டியபடி தீவிரமாக பேசினார். இது தொடர்பான வீடியோ வைரலானது.

தமிழக பா.ஜ.க.வில் அண்ணாமலைக்கும் தமிழிசைக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாகவும், தமிழிசை பேசிய சில கருத்துக்களை அமித்ஷா கண்டித்ததாகவும் தகவல் வெளியாகின. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில்,

தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக ஆந்திராவில் உள்துறை மந்திரி அமித் ஷாவை நான் சந்தித்தேன். அப்போது, தேர்தலுக்குப் பிந்தைய பணிகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி கேட்பதற்காக என்னை அழைத்தார். நான் விரிவாக கூறினேன். அப்போது, நேரமின்மை காரணமாக, மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக செய்யுமாறு அறிவுறுத்தினார். தேவையற்ற யூகங்கள் பரவுவதால் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவரும், கட்சியின் முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனை அவரது வீட்டில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், தமிழக பாஜக மாநிலத்தலைவராக திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.

தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காக கடினமாக உழைத்த அக்கா தமிழிசை சௌந்தரராஜன் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்