< Back
மாநில செய்திகள்
நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் கைதானவர்களுக்கு கால் முறிவு
மாநில செய்திகள்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் கைதானவர்களுக்கு கால் முறிவு

தினத்தந்தி
|
19 July 2024 3:51 AM IST

குடும்பப் பிரச்சினை மற்றும் சொத்து பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது

மதுரை,

மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 50). நாம் தமிழர் கட்சியின், மதுரை வடக்கு தொகுதி துணைச் செயலாளராக இருந்தார். இவர் கடந்த 16-ந்தேதி காலை, சொக்கிக்குளம் பகுதியில் நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை வழக்கு தொடர்பாக, மதுரை பொதும்பு பகுதியைச் சேர்ந்த பென்னி (19), சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த கோகுல கண்ணன் (19), வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த பரத் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குடும்பப் பிரச்சினை மற்றும் சொத்து பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான பாலசுப்பிரமணியனின் உறவினர் மகாலிங்கம் (54) மற்றும் அவரது மகன் அழகு விஜய் (22) ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் இருவரும் குற்றாலம் பகுதியில் தலைமறைவாக இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார், மகாலிங்கம், அழகு விஜய், மகாலிங்கத்தின் மனைவி நாகலட்சுமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இதற்கிடையே, பென்னி, கோகுலகண்ணன், பரத் ஆகியோரிடம் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து விசாரிப்பதற்காக, போலீசார் அவர்களை அழைத்து சென்றதாக தெரிகிறது. அப்போது அவர்கள் 3 பேரும், வைகை ஆற்றுப்பகுதியில் தப்ப முயன்றதாகவும், இதில் 3 பேரின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர்களை மீட்ட போலீசார், அவர்கள் 3 பேரையும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்