< Back
மாநில செய்திகள்
திருமாவளவன் மாநாடு மக்களை ஏமாற்றும் வேலை - எச்.ராஜா
மாநில செய்திகள்

திருமாவளவன் மாநாடு மக்களை ஏமாற்றும் வேலை - எச்.ராஜா

தினத்தந்தி
|
17 Sept 2024 11:43 PM IST

தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமே என எச்.ராஜா கூறியுள்ளார்.

கோவை,

தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க.வில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. எங்களுக்கு 31 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதனை 1 கோடியாக உயர்த்த உள்ளோம். கிராமப்புறங்களில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் ஆர்வத்துடன் பாரதிய ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள்.

நேற்று திருமாவளவன், முதல்-அமைச்சரை நேரில் சந்தித்துள்ளார். திருமாவளவன், அக்டோபர் 2 மாநாடு நடைபெறுவதற்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும். அதனை எதிர்பார்க்கிறோம் என சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படி அவர் சொல்லவில்லை. இதனால் அக்டோபர் 2 மாநாடே மக்களை ஏமாற்றுகிற செயல்.

இன்று மாநில அரசு 500 கடைகளை மூடி உள்ளது என கூறி உள்ளது. ஆனால் 1000 கிளப்களை திறந்துள்ளீர்கள். இது எல்லாவிதத்திலும் மக்களை முழுமையாக ஏமாற்றும் மோசடி அணுகுமுறை ஆகும். தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமே. அதற்கு சமீபத்திய உதாரணம் பீகார் மாநிலம் ஆகும். பீகாரில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

பாரதிய ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. சேருமா என்றால் அதற்கு நான் பதில் அளிக்க முடியாது. எங்கள் கூட்டணியில் இப்போது பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ. பன்னீர்செல்வம் அணி ஆகியவை உள்ளன. கூட்டணியில் அ.தி.மு.க.வை சேர்ப்பதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார் என்றால் அது பற்றி எனக்கு தெரியாது. புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது பற்றி கட்சியின் தேசிய தலைமை தான் முடிவு செய்யும்"

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்