'சேர்ந்து வாழவிட மாட்டார்கள்..' - தோழிக்கு தகவல் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி
|அவரவர் குடும்பத்தை தவிக்கவிட்டு விட்டு தனிக்குடித்தனம் நடத்திய கள்ளக்காதல் ஜோடி, தற்கொலை செய்து கொண்டது.
சென்னை,
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் 5-வது பிளாக்கை சேர்ந்தவர் செல்பியா மேரி (வயது 23). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இதேபோல் செம்மஞ்சேரியை சேர்ந்தவர் விஜய் (30). தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை செய்து வந்த அவருக்கும், திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்தநிலையில் செல்பியா மேரிக்கும், விஜய்க்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் இருவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. இருவரையும் அவர்களது குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் செல்பியா மேரி, விஜய் இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரவர் குடும்பத்தினரை தவிக்க விட்டு விட்டு அதே பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் செல்பியா மேரி, தனது தோழி ரேகாவுக்கு செல்போனில் ஒரு தகவல் அனுப்பினார். அதில் அவர், "என் வீட்டார் எங்களை சேர்ந்து வாழ விடமாட்டார்கள். அதனால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறோம்" என கூறி இருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரேகா, பெரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது வீட்டின் ஹாலில் விஜய், சால்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். படுக்கை அறையில் செல்பியா மேரி, புடவையால் தூக்குப்போட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.