பூரண மது விலக்கு கொண்டு வருவதற்கான சூழல் தற்போது இல்லை - அமைச்சர் முத்துசாமி
|தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவதற்கு அரசுக்கு விருப்பம் இருந்தாலும், ஆனால் அதற்கான சூழல் இல்லை என சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.
சென்னை,
சட்டசபையில் மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. தமிழக மதுவிலக்குச் சட்டம் 1937- ஐ திருத்தம் செய்யும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின்படி, கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். குற்றவாளிகளுக்கு பயன்படுத்தப்படும் அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா மீதான விவாதத்தில் அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: தமிழகத்தில் பூரண மது விலக்கை உடனே கொண்டு வர முடியுமா என சிந்தித்து பார்க்க வேண்டும். பூரண மதுவிலக்கு என்பதில் எங்களுக்கு விருப்பம் உள்ளது. ஆனால், அதற்கான சூழல் தற்போது இல்லை. படிப்படியாக கடைகளை மூடினாலும் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஒரு மதுக்கடையை மூடினால், மற்ற கடையில் மது வாங்கி அருந்துகிறார்கள். படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதே அரசின் எண்ணம்" என்றார்.