< Back
மாநில செய்திகள்
திமுக, காங்கிரஸ் வென்றதில் எந்த பலனும் இல்லை -  தமிழிசை சவுந்தரராஜன்
மாநில செய்திகள்

திமுக, காங்கிரஸ் வென்றதில் எந்த பலனும் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன்

தினத்தந்தி
|
8 Jun 2024 10:46 AM IST

என்னுடைய அரசியல் வாழ்க்கையில் நான் எதையும் எதிர்பார்ப்பது கிடையாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் டெல்லி செல்கிறோம். 3-வது முறையாக பலம் மிகுந்த நாடாக இந்தியாவை மாற்ற பலமான பிரதமர் மோடி பதவி ஏற்பதை கண்டு களித்து வாழ்த்து சொல்ல போகிறோம்.

குறைவான இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியான பா.ஜனதாவை பார்த்து விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. கூட்டணி ஆட்சி நடத்துவது சிரமம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கட்சி நடத்தவே தெரியாதவர்கள் காங்கிரசார். எனவே அவர் அப்படித்தான் சொல்வார். அவர்களை பொறுத்தவரை ஆட்சி நடத்துவது சிரமம் தான்.

பா.ஜ.க. பெற்ற வாக்குகள் அனைத்தும் பா.ம.க. வாக்குகள் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறார். அப்படியானால் காங்கிரஸ் பெற்ற மொத்த வாக்குகளும் தி.மு.க. ஓட்டு. இதை மு.க.ஸ்டாலின் மறுப்பாரா? தனித்து நின்றால் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் டெபாசிட் வாங்காது. பா.ஜனதாவை விமர்சிக்க அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. 28 ஒட்டு துணிகளை தைத்து போர்த்திக் கொண்டு பேசுகிறார்கள்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை எப்போதுமே இந்த தவறைத்தான் செய்வார். எதிரணியில் இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் கிடைக்காமல் செய்வார். தனது சுய நலத்துக்காக அதைத்தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறார்.

தமிழக மக்களுக்காக போராடி என்னென்ன திட்டங்கள் கொண்டு வர முடியுமோ அதையெல்லாம் கொண்டு வருவோம். நாங்கள் மக்களுக்காகத்தான் பணியாற்றி கொண்டிருக்கிறோம்.

கூட்டணியை பொறுத்தவரை வாக்குகள் கணக்குபடி பார்த்தால் பலமான கூட்டணியாக அமைந்து இருந்தால் பா.ஜ.க. வெற்றி பெற்று இருக்கும் என்பதைத்தான் கூறினேன். அதை எங்கெங்கோ எப்படியெல்லாமோ கொண்டு செல்கிறார்கள்.

ஒரு காலத்தில் பா.ஜ.க. சேர்ந்தால் தோற்கும் என்றவர்கள். இப்போது பா.ஜ.கவும் சேர்ந்து இருந்தால் வெற்றி பெற்று இருக்கும் என்று சொல்வது மகிழ்ச்சி. அதே போல் பா.ஜ.வுக்கு வாக்குகள் அதிகரித்து இருப்பதும் கூடுதல் மகிழ்ச்சி. ஆனால் எந்த பலனும் இல்லாத தி.மு.க.வுக்கு பலன் கிடைத்து விட்டதே என்பது தான் வருத்தம். திமுக, காங்கிரஸ் வென்றதில் எந்த பலனும் இல்லை.

தமிழகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சியை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி சுட்டிக்காட்டி இருப்பது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

எனக்கு மந்திரி பதவி கிடைக்குமா? என்றீர்கள். அரசியலில் நான் எதையும் எதிர்பார்ப்பது கிடையாது. கட்சி கொடுக்கும் அங்கீகாரத்தை தான் பெருமையாக கருதுவேன். எப்போதும் எதைப் பற்றியும் நினைத்ததில்லை. ஆண்டவனிடமும், ஆண்டு கொண்டிருப்பவர்களிடமும் முடிவை விட்டு விட்டேன்.

2026 தேர்தலை பற்றி இப்போது பேச வேண்டியதில்லை. இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. பொதுவாக தேர்தலில் கூட்டணி அமைப்பது பலத்துக்காக மட்டுமல்ல. எதிரணியை பலவீனப்படுத்தவும்தான். அதுதான் தேர்தல் வியூகம்.

யார் என்ன சொன்னாலும் சரி. எனது கருத்தை நான் உரக்க சொல்வேன். எனது கருத்தை மேலிடத்துக்கு தெரிவிப்பேன். கூட்டணி பற்றி அவர்கள் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்