< Back
மாநில செய்திகள்
காதல் விவகாரத்தில் நண்பனையே கொலை செய்த இளைஞர்...  நடந்தது என்ன?
மாநில செய்திகள்

காதல் விவகாரத்தில் நண்பனையே கொலை செய்த இளைஞர்... நடந்தது என்ன?

தினத்தந்தி
|
17 Jun 2024 1:29 AM IST

ஒரே பெண்ணை இருவர் காதலித்ததால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. அவருடைய மகன் சேது மணிகண்டன் (வயது 23). இவர் நாற்காலி தயாரிக்கும் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். பவானி செங்காடு பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன். அவருடைய மகன் குகநாதன் (26). இவர் தள்ளுவண்டியில் காளான் விற்பனை செய்து வருகிறார். இவரும், சேது மணிகண்டனும் நண்பர்கள் ஆவர்.

இந்த நிலையில் சேது மணிகண்டனும், அவருடைய வீட்டுக்கு அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். திடீரென அந்த பெண் சேது மணிகண்டனை விட்டுவிட்டு குகநாதனை காதலித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சேது மணிகண்டன் தான் காதலித்த பெண்ணின் பிறந்தநாள் என்பதால் தனது செல்போனில் அவருடைய புகைப்படத்தை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்து வாழ்த்து சொன்னதாக தெரிகிறது.

இதேபோல் குகநாதனும் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஸ்டேட்டஸ் ஆக வைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனை பார்த்த சேது மணிகண்டன் செல்போனில் அவரை கண்டித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இரவில் பவானி அரசு ஆஸ்பத்திரி அருகே சேது மணிகண்டன் நின்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த குகநாதனுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றிய நிலையில் குகநாதன் திடீரென தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சேது மணிகண்டனின் மார்பு மற்றும் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அலறியபடி கீழே சாய்ந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சேது மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குகநாதனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்