இனிய குரலில் பேசிய இளம்பெண்... நம்பி சென்ற தொழில் அதிபர்.. அடுத்து நடந்த பரபரப்பு
|தொழில் அதிபரை காரில் கடத்தி ரூ.50 லட்சத்தை பறித்த வழக்கில் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
சென்னை ராயப்பேட்டை மீர் பக் ஷி அலி தெருவை சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன் (வயது 32). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர், பர்மா பஜாரில் செல்போன் விற்பனை கடை வைத்துள்ளார். பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இவர் கடந்த 24-ந் தேதி அன்று பரபரப்பு புகார் மனு அளித்திருந்தார்.
அதில் அவர், 'நான் கடந்த 17-ந் தேதி அன்று பட்டினப்பாக்கம் கற்பகம் அவென்யூ 2-வது தெருவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றிருந்தேன். அப்போது மற்றொரு காரில் வந்த 4 பேர் கும்பல் என்னை கடத்தி சென்றனர். மதுரவாயல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். ரூ.50 லட்சம் கொடுத்தால் உயிரோடு விட்டு விடுகிறோம் என்று மிரட்டினார்கள்.
நான் எனது சகோதரர் மூலம் பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தேன். பின்னர் அந்த கும்பல் என்னை சேத்துப்பட்டு ரெயில்வே பாலம் அருகே இறக்கிவிட்டு சென்றனர்' என்று கூறியிருந்தார். இந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அவரது தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், ஜாவித் சைபுதீனின் செல்போன் எண்ணுக்கு இளம்பெண் ஒருவர் அடிக்கடி பேசி வந்துள்ளார். அந்த பெண், 'என்னை உங்களுக்கு தெரியாது. ஆனால் உங்களை எனக்கு நன்றாக தெரியும். உங்களை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது. பட்டினப்பாக்கம் கற்பகம் அவென்யூ 2-வது தெருவில் 17-ந் தேதி நடக்கும் விருந்து நிகழ்ச்சிக்கு நான் வருகிறேன். நீங்களும் வாருங்கள். அங்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது' என்று இனிக்கும் குரலில் பேசி அழைத்திருக்கிறார்.
முகமும் காட்டாமல், முகவரியும் சொல்லாமல் பேசிய அந்த பெண்ணின் பேச்சை நம்பி, என்னதான் நடக்கிறது பார்ப்போமே? என ஜாவித் சைபுதீன் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றுள்ளார். அப்போதுதான் அவர் கத்திமுனையில் கடத்தப்பட்டு உள்ளார். ஜாவித் சைபுதீனை கடத்தியவுடன் அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் விலையுயர்ந்த 2 செல்போன்களை கடத்தல் கும்பல் பறித்துள்ளது. பின்னர், அந்த கும்பலின் மிரட்டலுக்கு பயந்து ஜாவித் சைபுதீன் தனது சகோதரர் மூலம் மயிலாப்பூர் நடுக்குப்பம் பகுதியில் வைத்து கடத்தல் கும்பல் கேட்ட ரூ.50 லட்சத்தை 2 தவணையாக கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது.
இதில் ஜாவீத் சைபுதீனை இனிக்கும் குரலில் பேசிய இளம்பெண் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சோனியா (26) என்பது தெரியவந்தது. அவரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
ஜாவித் சைபுதீன் வசதியானவர் என்பதை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் மோப்பம் பிடித்து வைத்திருந்தனர். அவருடைய செல்போன் எண்ணை வாங்கி சோனியாவிடம் கொடுத்துள்ளனர். பின்னர் அந்த கும்பலின் திட்டத்தின்படியே ஜாவித் சைபுதீனிடம் சோனியா இனிக்க, இனிக்க பேசி தனது வலையில் விழ வைத்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதேபோன்று இந்த கடத்தல் கும்பல் சோனியாவை பகடை காயாக வைத்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.