ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு.. தாயை சக்கர நாற்காலியில் அமர வைத்து தள்ளிச்சென்ற மகன்
|சக்கர நாற்காலியில் அழைத்து செல்லக்கோரி ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கதிர்வேல் நீண்ட நேரம் போராடினார்.
ஈரோடு,
ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி சொர்ணம் என்பவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது சொர்ணத்தை விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மூதாட்டி சொர்ணத்தை அழைத்து செல்ல சக்கர நாற்காலி மற்றும் தூக்குபடுக்கை வழங்கப்படாததால் அவரது மகள் வளர்மதி தனது தாயை கையில் தூக்கிக்கொண்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது.
அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் மற்றும் உறைவிட டாக்டர் ஆகியோருக்கு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் நோட்டீஸ் வழங்கினார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் மீண்டும் இதேபோன்ற ஒரு சம்பவம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த தறிப்பட்டறை தொழிலாளி கதிர்வேல் என்பவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 60 வயதான தனது தாய் குமுதாவை, கால் புண் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது தாய் குமுதாவிற்கு சர்க்கரை அதிகமாக இருந்ததால், அவரது கால்புண்ணை சிகிச்சை செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று அறுவை சிகிச்சை தியேட்டருக்கு அழைத்து சென்று சுத்தம் செய்ய திட்டமிட்ட நிலையில், குமுதாவை அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லக்கோரி ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் நீண்ட நேரம் போராடியும், அவர்கள் யாரும் முன்வராததால், குமுதாவின் மகன் கதிர்வேல் தாயை சக்கர நாற்காலியில் அமர வைத்து சிரமப்பட்டு அழைத்து சென்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல சர்க்கரை நோய் காரணமாக தாயின் உடலில் உள்ள வேறு ஏதேனும் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டறிய ஸ்கேன் மையத்துக்கு அழைத்து செல்வதிலும், இதே சிரமம் ஏற்பட்டதாக கதிர்வேல் தெரிவித்தார்.
இதற்கிடையில் ஆஸ்பத்திரிக்கு தொடர்பில்லாத ஒருவர் சக்கர நாற்காலியில் அழைத்துவர நோயாளிகளிடம் இருந்து ரூ.5 முதல் ரூ.20 வரை பெற்றுக்கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.