விவாகரத்து கேட்டு கணவர் கோர்ட்டில் வழக்கு... விருப்பம் இல்லாத மனைவி... அடுத்து நடந்த சோகம்
|விவாகரத்தில் மனைவி ஷோபாவுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.
சென்னை,
சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஷோபா (வயது 30). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவருக்கும், நன்மங்கலத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கார்த்திக் (33) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மகன் இருக்கிறான்.
கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். கார்த்திக் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதில் ஷோபாவுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நன்மங்கலத்தில் உள்ள கார்த்திக் வீட்டுக்கு சென்ற ஷோபா இதுபற்றி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு கார்த்திக், கோர்ட்டு வழியாக தீர்வு காணலாம் என கூறியதாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்றும் கார்த்திக் வீட்டுக்கு சென்று இதுபற்றி ஷோபா பேசினார். ஆனால் அதில் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதில் மனமுடைந்த ஷோபா, வேளச்சேரி விஜயநகர் இரண்டு அடுக்கு புதிய மேம்பாலத்தில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
பாலத்தின் மைய பகுதிக்கு சென்றதும், திடீரென ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். பின்னர் ஹெல்மட் மற்றும் செருப்பை கழற்றி வைத்துவிட்டு, சுமார் 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து விட்டார். கீழே உள்ள சாலையில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஷோபா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷோபா தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.