< Back
மாநில செய்திகள்
கடனை திருப்பி செலுத்தக்கோரி மிரட்டிய நிதிநிறுவனம்... வீடியோ வெளியிட்டு தாய், மகன் தற்கொலை
மாநில செய்திகள்

கடனை திருப்பி செலுத்தக்கோரி மிரட்டிய நிதிநிறுவனம்... வீடியோ வெளியிட்டு தாய், மகன் தற்கொலை

தினத்தந்தி
|
7 July 2024 7:40 AM IST

தனியார் பைனான்ஸ் நிறுவன மேலாளர், கடனை திருப்பிசெலுத்தக்கோரி மிரட்டியதாக கூறப்படுகிறது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் ஏரிகுத்திமேடு பகுதியைச் சேர்ந்தவர் அன்சர் (வயது52). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மும்தாஜ் (48). இவர்களுக்கு நஸ்ரின், ஷபிஹா ஆகிய 2 மகள்களும், இம்ரான் (28) என்ற மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

இம்ரான் அதேப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி 2½ வருடங்களாகிறது. அர்ஷியமா என்ற மனைவியும், அபான் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளனர். தற்போது அர்ஷியமா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

அன்சர், அவரது மனைவி மும்தாஜ் ஆகிய இருவரும் பேரணாம்பட்டு, குடியாத்தம், ஆம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இயங்கி வரும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிலும், மகளிர் குழுக்களிலும், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் ரூ.28 லட்சமும், தனியார் நிதி நிறுவனங்களில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரமும் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கடனை அடைப்பதற்காக உள்ளூர் பைனான்ஸ்களில் கடன் வாங்கி செலுத்தி வந்துள்ளனர். அதிகளவில் கடன் வாங்கியதால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று மும்தாஜ், இம்ரான் இருவரும் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மேலாளர் அன்சரின் வீட்டுக்கு சென்று கடனை திருப்பிசெலுத்தக்கோரி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து அன்சர் வெளியில் சென்றுவிட்டார்.

இம்ரானின் மனைவி அர்ஷியமா கர்ப்பிணியாக இருப்பதால் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு தனது தந்தை குலாப் உடன் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். இந்த நிலையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர் கடனை திருப்பி செலுத்துமாறு கூறி கதவை தட்டியதால் அவமானமடைந்து மன உளைச்சலுக்கு ஆளான மும்தாஜ், அவரது மகன் இம்ரான் ஆகியோர் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இம்ரான் தனது தாயார் மும்தாஜுடன் கதறி அழுதவாறு வீடியோ பதிவிட்டு பேசி உள்ளார். அதில் எங்களால் எதுவும் செய்ய முடியல. அப்பா அன்சர் எல்லா இடங்களிலும் எங்களை காட்டி கடன் வாங்கியுள்ளார். கடனை கட்ட முடியவில்லை. பதில் சொல்ல முடியல. பெட்ரோல் வாங்கிட்டு வருவதாக அப்பா அன்சர் சொல்லிவிட்டு போனார். ஆனால் திரும்பி வரவில்லை என கதறி அழுதவாறு வீடியோ பதிவிட்டு தன்னுடைய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்