பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நிறைவு
|ரெயில் என்ஜின் தூக்கு பாலத்தை கடந்து பாம்பன் ரெயில் நிலையம் வரை சென்றதால் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது.
ராமேஸ்வரம்,
பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் மையப் பகுதியில் அமைந்திருந்த ரெயில் தூக்குப்பாலம் நூற்றாண்டைக் கடந்த நிலையில், ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய ரெயில் பாலம் கட்ட திட்டமிட்டு கடந்த 2018-ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பால பணிகள் முழுமையாக நிறைவடைய உள்ள நிலையில், அதன் மையப்பகுதியில் அமைந்துள்ள சுமார் 500 டன் எடை கொண்ட செங்குத்து இரும்பு தூக்கு பாலத்தில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. தண்டவாளங்கள் அமைத்த பின் முதல் முறையாக பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் வழியாக ரெயில் எஞ்சினை இயக்கி ரெயில்வே துறையினர் சோதனை மேற்கொண்டனர். ரெயில் என்ஜின் செங்குத்து தூக்கு பாலத்தை கடந்து பாம்பன் ரெயில் நிலையம் வரை சென்றதால் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது.
முன்னதாக மண்டபம் ரெயில் நிலையத்திலிருந்து பாம்பன் புதிய பாலம் வரை சரக்கு ரெயில் இயக்கப்பட்டு சோதனை நடைபெற்ற நிலையில், இன்று முதல் முறையாக புதிய ரெயில் பாலத்தில் முழுமையாக ரெயில் எஞ்சினை மட்டும் இயக்கி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடந்து முடிந்தது. மேலும், நாளை மறுநாள் (ஆக. 7) சரக்கு ரெயிலை பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் முழுமையாக இயக்கி சோதனை நடத்த இருப்பதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோதனை வெற்றிகரமாக முடிந்ததால் விரைவில் பாம்பன் பாலத்தில் ரெயில் சேவை தொடங்கவுள்ளது. இதனால் பாம்பன், ராமேஸ்வரம் பகுதி பொது மக்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.