சென்னையில் பயங்கரம்: சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி ரெயில்வே அதிகாரியின் மனைவியை கொன்று நகை கொள்ளை
|சென்னை வியாசர்பாடியில் நடந்த இந்த கொலை-கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
சென்னை வியாசர்பாடி வியாசர் நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 82). ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரி. இவரது மனைவி சரோஜினி பாய் (78). ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர்களுக்கு கற்பகம் (51), கலைவாணி (42) என 2 மகள்கள். இருவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். நாகராஜன், தனது மனைவி சரோஜினி பாயுடன் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சரோஜினி பாய், வீட்டின் வரவேற்பறையில் மயங்கி கிடந்தார். படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்த நாகராஜன், வெளியே வந்து பார்த்தபோது மனைவி பேச்சு மூச்சு இன்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே இதுபற்றி தனது மகளுக்கு தகவல் தெரிவித்தார்
உடனடியாக கலைவாணி, தந்தையின் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது தாயார் சரோஜினி பாய் கழுத்தில் செல்போன் சார்ஜர் வயர் சுற்றப்பட்டு இருந்தது. இதனால் தாயின் சாவில் சந்தேகம் அடைந்த அவர், வியாசர்பாடி போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த . போலீசாரின் தீவிர விசாரணையில், மர்மநபர்கள் வீடு புகுந்து சரோஜினி பாயை தாக்கி கீழே தள்ளி, அவரது கழுத்தை சார்ஜர் வயரால் இறுக்கி கொலை செய்துவிட்டு, அவர் காதில் கிடந்த தங்க கம்மலை அறுத்து சென்று இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடியில் நடந்த இந்த கொலை-கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.