< Back
மாநில செய்திகள்
தஞ்சை அருகே பீர் பாட்டிலை காட்டி மிரட்டி இளம்பெண் கூட்டு பலாத்காரம்
மாநில செய்திகள்

தஞ்சை அருகே பீர் பாட்டிலை காட்டி மிரட்டி இளம்பெண் கூட்டு பலாத்காரம்

தினத்தந்தி
|
14 Aug 2024 2:45 PM IST

கஞ்சா கும்பல் பீர்பாட்டிலை காட்டி இளம்பெண்ணின் ஆடைகளை அகற்றக் கூறியுள்ளனர்.

தஞ்சை,

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பநாடு பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண். இவர், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், விடுமுறைக்காக அந்த பெண் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த 12-ம் தேதி மாலை கடைத் தெருவுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த அந்தப் இளம்பெண்ணை வீட்டருகே நின்று கொண்டிருந்த தெற்கு கோட்டை பகுதியைச் சேர்ந்த கவிதாசன் (25) வலுக்கட்டாயமாக ஆள்கள் நடமாட்டம் இல்லாத கொட்டகை பகுதிக்கு இளம்பெண்ணை இழுத்து சென்றார்.

அந்த இடத்தில் கவிதாசனின் நண்பர்கள் சிலரும் இருந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் ஏதோ பெரிய பிரச்சினை ஏற்படப்போகிறது என்பதைப் புரிந்துகொண்டு அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சித்துள்ளார். அப்போது, கவிதாசன் மற்றும் அவரது நண்பர்கள் பீர் பாட்டிலை உடைத்து இங்கிருந்து நகர்ந்தால் குத்தி கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, பாட்டிலைக் காட்டி மிரட்டி ஆடைகளை அகற்றக் கூறியுள்ளனர். அந்த சமயத்தில் இளம்பெண்ணின் இரண்டு பக்கமும் ஒருவர் கத்தியுடனும், மற்றொருவர் உடைந்த பீர் பாட்டிலுடனும் நின்று கொண்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து, கவிதாசன் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, அவரது நண்பர்கள் இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அப்போது, அந்த நான்கு பேரில் ஒருவர் இச்சம்பவத்தை செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளார். கஞ்சா போதையில் இருந்த அந்த கொடூர கும்பல் கொஞ்சம் கூட பயப்படாமல் இந்த படுபாதக செயலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து, ஒரத்தநாடு ஏ.எஸ்.பி. சகுனாஸ் மற்றும் எஸ்.பி. ஆசிஷ் ராவத் ஆகியோர் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கவிதாசன் (27), திவாகர் (27), பிரவீன் (20), (17) வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அப்பெண் தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீட்டிலிருந்த பெண்ணை மிரட்டி கஞ்சா கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்