< Back
மாநில செய்திகள்
சீமான், திருமாவளவனுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து
மாநில செய்திகள்

சீமான், திருமாவளவனுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து

தினத்தந்தி
|
7 Jun 2024 1:00 PM IST

சீமான் மற்றும் திருமாவளவனுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்தபடியாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் முக்கியமான கட்சிகளாக உள்ளன. இதில் நாம் தமிழர் கட்சிக்கு பல தொகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 8% வாக்குகள் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி, 8.19% வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சிகளுக்கு மாநில கட்சி அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளைப் பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளது.

வாக்கு சதவீதம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இரு கட்சிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதை தேர்தல் ஆணையம் உறுதி செய்து 15 நாட்கள் முதல் ஒரு மாத காலத்துக்குள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சீமான் மற்றும் திருமாவளவனுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்