'அனைவரையும் உள்ளடக்கிய, மதசார்பற்ற ஆட்சிக்கு தமிழ்நாடு வாக்களித்துள்ளது' - கார்த்தி சிதம்பரம்
|அனைவரையும் உள்ளடக்கிய, மதசார்பற்ற கூட்டாட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவில், புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் பா.ஜனதா தனித்து 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 'இந்தியா' கூட்டணி 234 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இரு அணிகளையும் சேராத கட்சிகள் 17 இடங்களை பிடித்துள்ளன. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும்.
இதனிடையே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 'இந்தியா' கூட்டணி வெற்றி வாகை சூடியிருக்கிறது. தமிழ்நாட்டின் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 2,05,664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது;-
"தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 'இந்தியா' கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகத்தெளிவான வெற்றியை கொடுத்துள்ளனர். பா.ஜ.க.வின் இந்துத்துவ அரசியலை தமிழ்நாடு நிராகரித்துவிட்டது என்பது தேர்தல் முடிவுகளின் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய, மதசார்பற்ற கூட்டாட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.