போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளது - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
|போதைப் பொருள் நடமாட்டத்தை அடியோடு தடுக்க அரசியல் தலையீடு இன்றி சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
ஓரிரு நாட்களுக்கு முன்பு சென்னை துறைமுகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிப்ரின் என்ற போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்ற செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு செல்ல இருந்த சரக்குப் பெட்டகம் ஒன்றை சோதனை செய்ததில் போதைப் பொருள் சிக்கியதாகவும், இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பந்தமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும், சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தி.மு.க.வின் அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன. கடந்த 40 மாத விடியா திமுக-ஆட்சியில் சமூக விரோத சக்திகளும், ஆளும் தரப்பினரும் பிரிக்க முடியாத அளவு ஒட்டி உறவாடுவது தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது. சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளிவரும் தன் கட்சிக்காரர்களுக்கு, ஒரு முதலமைச்சரே தியாகிகள் பட்டம் வழங்குவதால், சமூக விரோத சக்திகள் அனைவரும் தெம்புடன் வலம் வருவது ஆச்சரியப்படத்தக்கதல்ல.
பொது வெளியில் மத்திய அரசை எதிர்ப்பதும், தனது குடும்பம் மற்றும் கட்சி நிர்வாகிகள் நலன்களைப் பாதுகாக்க, திரை மறையில் ஆதரவு என்று இரட்டை வேடம் ஆடுகிறதோ ஸ்டாலினின் விடியா தி.மு.க. அரசு என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளதற்கு காரணகர்த்தாக்கள் யார்? சூத்ரதாரிகள் யார்? யார்? என்பது நன்கு தெரிந்திருந்தும் ஆணிவேர் எங்கிருக்கிறது என்று தெரிந்திருந்தும், அவர்கள் மீது சட்டத்தின் இரும்புப்பிடி நீளாமல், கடத்தலில் ஈடுபடும், குருவிகள் என்றழைக்கப்படும், சிறு சிறு கடத்தல் வேலை செய்யும் ஒருசிலரை மட்டும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பிடிக்கும் மர்மம் என்ன என்று மக்கள் குழம்பிப் போயுள்ளனர். சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் சம்பாதித்த பல ஆயிரம் கோடி ரூபாயில் யார் யார் பங்கு உள்ளது? யார் யார் சினிமா தயாரித்தார்கள்? என்று ஆதாரங்களுடன் தெரிந்திருந்தும் சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தொடர் நடவடிக்கைகள் எடுக்காதது ஆச்சரியத்தை அளிக்கிறது.
இனியாவது ஸ்டாலினின் தி.மு.க. அரசு, தமிழக இளைஞர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, காவல்துறை அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கி, தனிப்பட்ட ஆதாயங்களுக்காக சமூக விரோத சக்திகளை ஊக்குவிக்கும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், இனி தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை அடியோடு தடுக்க அரசியல் தலையீடு இன்றி சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கவும், தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் போதைப் பொருட்களின் ஆணிவேரைக் கண்டறிந்து அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தொடர்ந்து இதுபோன்ற போதைப் பொருள் கடத்தல், விற்பனை தொடர்ந்தால், தமிழக இளைஞர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமே பாழாகும் என்பதை நினைவில் நிறுத்தி போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது சம்பந்தப்பட்ட மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.