3 அமைச்சர்களின் பதவி பறிப்பு... நீக்கப்பட்ட அமைச்சர்கள் யார் யார்..?
|புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நாளை மாலை நடைபெறும் என்று கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு உடனடியாக அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவைப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக உதயநிதிக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகிகள் பேசி வந்தனர்.
பின்னர், இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "மாற்றம் இருக்கும்.. ஏமாற்றம் இருக்காது.. " என்று அமைச்சரவை மாற்றம் குறித்தும், உதயநிதியின் துணை முதல்-அமைச்சர் பதவி குறித்தும் உறுதிப்படுத்தி இருந்தார்.
இதற்கிடையே, அமைச்சரவை மாற்றம் குறித்து இன்று கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி, தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில் புதிய மாற்றங்கள் குறித்து கவர்னர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதி தற்போது வகிக்கும் துறையுடன் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தும் துறையை சேர்ந்து கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மொத்தம் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பனுக்கு காதி மற்றும் பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கோவி. செழியன், ராஜேந்திரன் போன்றோருக்கு புதிதாக அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
மோசடி வழக்கில் சிறை சென்று, பிணையில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை மாலை 3.30 மணிகு புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெறுவதாக கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.