எம்.ஜி.ஆரின் வரலாறு தெரியாமல் பேசுவதா? - அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
|திமுகவை போல பாஜகவும் இரட்டை வேடம் போடுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்,
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கருணாநிதி நாணய வெளியிட்டு விழா அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம்தான் இருந்தது. மாநில அரசின் செயலாளர் பெயர்தான் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நாணய வெளியீட்டு விழாவை மத்திய அரசுதான் நடத்தியதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
திமுக அரசை குற்றம்சாட்டினால் பாஜக தலைவர் என்னை குறைசொல்கிறார். பொய்களை மட்டுமே பேசுபவர்தான் தமிழக பாஜக தலைவராக உள்ளார். மத்திய அரசில் இருந்து ஆட்சியாளர்கள் வந்து நாணயத்தை வெளியிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு புகழ் என பாஜக கூறிக்கொண்டிருக்கிறது. பாஜக தலைவர் அண்ணாமலை பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைத்துள்ளார். எம்.ஜி.ஆரின் வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக அண்ணாமலை பேசுகிறார்.
மத்தியில் ரூ.55 லட்சம் கோடியாக இருந்த கடன், 10 ஆண்டுகளில் 165 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளில் பாஜக எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை, கடன் சுமைதான் அதிகரித்துள்ளது. திமுகவை போல பாஜகவும் இரட்டை வேடம் போடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.