இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்... பேசுவதை தவிர்த்ததால் ஆத்திரம்
|நாகலட்சுமி உடலை போலீசார் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா அல்லிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நாகலட்சுமி (வயது 25). இவருக்கும் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த பீமராஜ் (35) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சம்பிரீத்ராஜ் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது. நாகலட்சுமி தன் சொந்த ஊரான அல்லிக்குளம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நாகலட்சுமியும், இவரது உறவினரான விருதுநகர் அருகே உள்ள மத்தியசேனை கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டியன் (26) என்பவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த பீமராஜ், மனைவியை கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜபாண்டியனுடன் பேசுவதை நாகலட்சுமி தவிர்த்து வந்தார். இதனால் இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மகனுடன் நாகலட்சுமியும், உறவினரான பிரியதர்ஷினியும் (20) காரியாபட்டியில் உள்ள ஒரு வங்கிக்கு வந்தனர். அப்போது அங்கு ராஜபாண்டியன் மோட்டார் சைக்கிளில் வந்தார். நாகலட்சுமி, அவருடைய குழந்தை சம்பிரீத் ராஜ், பிரியதர்ஷினி ஆகிய 3 பேரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
எஸ்.கல்லுப்பட்டி விலக்கு அருகே சென்றபோது பிரியதர்ஷினியையும், குழந்தையையும் இறக்கிவிட்டு, நாகலட்சுமியை மட்டும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு ராஜபாண்டியன் தன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து ராஜபாண்டியன் மட்டும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துள்ளார். அவரிடம் நாகலட்சுமி எங்கே? என்று பிரியதர்ஷினி கேட்டதற்கு, நாகலட்சுமி காட்டுப்பகுதியில் பிணமாக கிடப்பதாக கூறிவிட்டு ராஜபாண்டியன் சென்றுவிட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி, காட்டுப் பகுதியில் சென்று பார்த்த போது நாகலட்சுமி கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காரியாபட்டி போலீசார், நாகலட்சுமி உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், "காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றபோது அங்கு ராஜபாண்டியனுக்கும், நாகலட்சுமிக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பித்து ஓடிவர நாகலட்சுமி முயன்றுள்ளார். ஆனால், அவரை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு ராஜபாண்டியன் தப்பிச்சென்றுள்ளார்" என தெரிவித்தனர்.
நாகலட்சுமி கொலைக்கான முழு பின்னணி என்ன? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய ராஜபாண்டியனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.