சஸ்பெண்ட் நடவடிக்கை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று உண்ணாவிரதம்
|சட்டசபையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நடவடிக்கையை கண்டித்தும், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று (வியாழக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள். இதற்காக சென்னையில் வள்ளுவர் கோட்டம் உள்பட 4 இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
ஆனால் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே பல்வேறு நிபந்தனைகளுடன் போராட்டம் நடத்திக்கொள்ள நேற்று இரவு அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வள்ளுவர் கோட்டத்துக்கு பதிலாக எழும்பூரில் போராட்டம் நடக்கிறது. உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும். போராட்டம் நடத்தும் இடத்திற்கு எந்த காரணத்தை கொண்டும் வாகனங்களை கொண்டுவரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.