உயர்நீதிமன்றம் ஆணைப்படி சாம்சங் தொழிலாளர்களின் அறவழிப் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும் - ராமதாஸ்
|சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவது நியாயமல்ல என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தை முடக்கும் வகையில், அவர்களின் போராட்ட பந்தலை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் இரவோடு, இரவாக அகற்றியிருப்பதும், தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு சட்டவிரோதக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.
தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் இல்லை; பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லை. இத்தகைய சூழலில் அவர்களுக்கு துணையாக இருந்திருக்க வேண்டிய தமிழக அரசு, சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவது நியாயமல்ல.
சாம்சங் தொழிலாளர்கள் அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், அதை மதித்து அவர்களின் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும். சாம்சங் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.