'விஜய் கட்சிக்கு ஆதரவா..?' யுவன் சங்கர் ராஜா பதில்
|விஜய்யின் கட்சிக்கு பாடல் கேட்டால் நிச்சயம் செய்து கொடுப்பேன் என யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை,
கோவை மாவட்டம் கொடிசியா மைதானத்தில் வரும் அடுத்த மாதம் 12-ந்தேதி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து கோவையில் யுவன் சங்கர் ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், பழைய பாடல்களை ரீமேக் செய்வதால் அதன் உண்மை தன்மை மாறாது என்றார். மேலும், தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தொழில்நுட்பத்தால், அடுத்த 10 ஆண்டுகளில் இசையமைப்பாளர்களுக்கே வேலை இருக்காது எனவும், ஏ.ஐ. மென்பொருளுக்கான கட்டளைகளை உருவாக்க தெரிந்தவர்கள்தான் பணம் சம்பாதிக்கப் போகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "விஜய்க்கு ஆல் தி பெஸ்ட்" என்று பதிலளித்த அவர், "விஜய்யின் கட்சிக்கு பாடல் கேட்டால் நிச்சயம் செய்து கொடுப்பேன்" என்றார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தி கோட்' திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.