மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்... காதல் மனைவியை அடித்துக்கொன்ற வாலிபர்
|போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, பிரவீன்குமாரை கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அய்யப்பன் நகரை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 30). லாரி கிளீனரான இவர் அதே பகுதியை சேர்ந்த டிப்ளமோ நர்சிங் முடித்த வீரம்மாள் (25) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு வந்தது. ஆனாலும் அதையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நடந்த குடும்ப தகராறில் வீரம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பிரவீன் குமார் துவாக்குடி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும், வீரம்மாளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் இதேபோல் தகராறு ஏற்பட்டது. இதனால் நான் ஆத்திரத்தில் வீரம்மாளை கைகளால் அடித்தேன். பின்னர் அவரது கழுத்தில் காலால் மிதித்து கொலை செய்தேன் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். பின்னர் பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தனர்.