மாணவர்கள் தமிழில் எழுதப் படிக்கக் கூட தடுமாறும் நிலை - வானதி சீனிவாசன்
|அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழில் எழுதப்படிக்க கூட தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மாணவர்கள் தங்கள் மாநில பாடத்திட்டத்தையும் தாண்டி சிந்திக்க வேண்டும், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ்,ஏஐ தொழில்நுட்பங்கள் மற்றும் நானோ தொழில்நுட்பம் ஆகியவற்றை கற்க வேண்டும்" என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதை வழக்கம்போல் உங்கள் பாணியில் திரித்துப் பேசி அரசியாலாக்க முயற்சித்திருக்கும், சு.வெங்கடேசன் எம்.பி. அவர்களுக்கு,
உங்கள் கூட்டணிக் கட்சியான தி.மு.க. தமிழகத்தில் சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்த காலத்திலிருந்தே, மாநில பாடத்திட்டங்கள் மீது கடும் விமர்சனங்கள் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளன.
மாநில பாடத்திட்டத்தில் உள்ள சில குறைபாடுகளின் காரணமாகவே, இன்று தமிழகத்தில் நிறைய தனியார் பள்ளிகளும், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை நோக்கி நகரும் பெற்றோர்களும் அதிகரித்துள்ளனர் என்பது பலகாலமாக நமது தமிழ் சமூகத்தில் ஒலித்துவரும் கவனிக்கத்தக்க விமர்சனமாகும்.
ஆனால், தமிழகத்தின் நலன்சார்ந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அதை சீர்தூக்கிப் பார்த்து சரி செய்து கொள்ளும் பக்குவம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு இல்லை என்பதும்,
அதையும் மீறி விமர்சிப்பவர்கள் தமிழக கவர்னர் உட்பட யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாய்வதும், தமிழக அரசியல் தரத்தினை தாழ்த்திவிடும் என்பதை நீங்கள் சற்று உணரவேண்டும்.
மாநிலப் பாடத்திட்டத்தின் புகழ்கவி பாடும் உங்களுக்கு, தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழில் எழுதப் படிக்கக் கூட தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்ற தகவல் தெரியுமா?. தமிழகத்தில் ஆசிரியர்களின்றி பல அரசு பள்ளிகள் இயங்கும் நிலையில்,அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுகிறது என்பதை எவ்வாறு உறுதி செய்யமுடியும்? . உங்கள் கூட்டணி கட்சியான திமுக, "மாநிலக் கல்விக் கொள்கை" கொண்டுவரப்படும் என்று கூறி, 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதே, இதுவரை அதைப்பற்றி எதாவது கேள்வி எழுப்பியுள்ளீர்களா?
உங்களுக்குப் பிடித்தமான கட்சி ஆட்சியில் இருப்பதால், அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சிக்கும் இந்த அநீதி அரசைக் கண்டும் காணாமல் கடந்து செல்கிறீர்களோ? . தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இத்துனை அவலங்கள் நடக்கையில், மாநிலப் பாடத்திட்டம் தரம் குறைந்து கொண்டிருக்கிறது, அதனால் மாணவர்கள் பாடத்திட்டத்தையும் தாண்டி கற்க வேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது?
பெரியாருக்கு போலி யுனெஸ்கோ விருது கொடுத்தும், கட்டணம் செலுத்தி பெறப்பட்ட அஞ்சல் தலையை ஆஸ்திரிய நாடு தானே முன்வந்து கருணாநிதி அவர்களுக்கு கொடுத்த மரியாதை என்றும் போலி விளம்பரம் செய்த தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு, வீர சாவர்க்கர் குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் பேச எந்த தகுதியும் இல்லை என்பதை பணிவுடன் கூடிய எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.