< Back
மாநில செய்திகள்
செய்திகள் சில வரிகளில்...
மாநில செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

தினத்தந்தி
|
31 May 2024 1:29 PM IST

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

*இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2023-24-ம் ஆண்டு 8.2 சதவீதம் என்று மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 2012-23-ம் ஆண்டு இது 7 சதவீதமாக இருந்தது.

*வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதால் அசாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இதுபற்றி பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தனது எக்ஸ் தளத்தில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

*நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 128 -தொகுதிகளில் வெற்றிபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் பிரதமர் பதவிக்கு ராகுல்காந்தியை முன்னிலை படுத்துவோம் என்றும், இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும் அவர் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

*சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி ஆகஸ்ட் 19 ஆம் தேதி நேரில் ஆஜராக புனே கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

*இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் நாளை ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்பார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவரது டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

*பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

* பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இன்று அத்தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். நாளை வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மாலையில் வெளியாக இருக்கிறது.

* பாலியல் புகாரில் சிக்கி வெளிநாட்டிற்கு சென்று தலைமறைவான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா இன்று கைது செய்யப்பட்டார். ஜெர்மனியில் இருந்து வந்த அவரை பெங்களூரு விமானநிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

* தங்கம் கடத்தி வந்ததாக மேற்குவங்காளத்தை சேர்ந்த விமான பணிப்பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம் கண்ணுர் விமானநிலையத்தில் இச்சம்பவம் நடந்தது. கைதானவர் ஏர் இந்தியாவில் பணியாற்றி வந்தார்.

*மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார். அவருடன் அவரது மனைவி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் சென்று இருந்தனர்.

*நாட்டின் பல பகுதியில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வெப்பத்தின் காரணமாக 54 பேர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பீகாரை சேர்ந்தவர்கள் ஆவர்.

*ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டின் முன்னாள் சபாநாயகர் அலி லாரிஜானி மனு தாக்கல் செய்துள்ளார். 66 வயதான அலி முக்கிய போட்டியாளராக இருப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

* ஆபாச நடிகைக்கு தேர்தல் நிதியில் இருந்து பணம் கொடுத்து நிதிமுறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் ஜூலை 11-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் அபராதம் மட்டும் விதிக்க கூடும் என்று சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

* பிரதமர் மோடி இன்று 2-வது நாளாக கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக அவர் காலையில் சூரிய உதயத்தை பார்வையிட்டு வழிபாடு செய்தார்.

மேலும் செய்திகள்