< Back
மாநில செய்திகள்
எஸ்.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட்: 28-ந் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

'எஸ்.எஸ்.எல்.வி.-டி3' ராக்கெட்: 28-ந் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

தினத்தந்தி
|
10 July 2024 9:53 AM IST

'எஸ்.எஸ்.எல்.வி.-டி3' ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 28-ந் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

சென்னை,

சிறிய வகையிலான மைக்ரோ மற்றும் நானோ வகை செயற்கைக்கோள்களை தயாரித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முன்பு பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் பொறுத்தி விண்ணில் ஏவி வந்தது. இதற்கு அதிக பொருட்செலவு ஏற்படுவதால் சிறிய வகை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக, 'சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்' (எஸ்.எஸ்.எல்.வி.) ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ தயாரித்தது.

இவை செலவு குறைந்த ராக்கெட்டாகும். தொழில் துறை உற்பத்திக்காக இந்த வகை ராக்கெட்டுகள் அதிகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிறிய வகை செயற்கைக்கோள்கள் தேவைக்கு ஏற்ப தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது.

தனித்துவமான இந்த வகை ராக்கெட்டுகள் 3 நிலை கட்டமைப்புகளை கொண்டிருக்கும். உந்துவிசைக்காக 3 நிலைகளிலும் திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இவை வேகத்தை பயன்படுத்தி துல்லியமான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தும் சக்தி படைத்தது.

இந்தவகையில் முதல் எஸ்.எஸ்.எல்.வி.டி.-1 ராக்கெட், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த பணி அதன் நோக்கத்தை அடையவில்லை.

எனினும். இஸ்ரோ இந்த ராக்கெட்டில் இருந்து மதிப்புமிக்க பாடங்களை கற்றுக்கொண்டு, அடுத்து வந்த ராக்கெட்டில் அவற்றை பயன்படுத்தவும் திட்டமிட்டது. தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் வகையில் மேம்படுத்தப்பட்ட ராக்கெட் வடிவமைக்கப்பட்டது. இதை கடந்த பிப்ரவரி 10-ந் தேதி வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் இ.ஓ.எஸ்.-07, ஜானஸ்-1 மற்றும் ஆசாதிசாட்-2 ஆகிய செயற்கைக்கோள்கள் பொறுத்தப்பட்டு வெற்றிகரமாக பூமியில் இருந்து 450 கி.மீ. தூரத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட்டை, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். இதன் மூலம் தொழில்துறையினருக்கு செலவு குறைந்த ராக்கெட்டுகளுக்கான கதவு திறக்கப்பட்டு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

மேலும் செய்திகள்