ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. திடீர் ஆய்வு
|திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் சத்யவாகீஸ்வர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் உபகோவிலாக விளங்குகிறது. சோழர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில் பழமை வாய்ந்த செப்புத்தகடு இருந்துள்ளது. சுந்தரசோழர் ஆட்சிக்காலத்தில் தயாரிக்கப்பட்ட அந்த செப்புத்தகட்டில், அமைச்சருக்கு 10 வேலி நிலம் வழங்கியது தொடர்பான தகவல் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த செப்புத்தகடு கடந்த 1957-ம் ஆண்டு காணாமல் போனது. இது தொடர்பாக கோவிலில் ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் துறையினர், செப்புத்தகடு குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் காணாமல் போன செப்புத்தகடு குறித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சிவக்குமார் இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்தார். அங்குள்ள முக்கிய சன்னதிகளுக்கு சென்று வழிபாடு செய்த அவர், திருக்கோவிலில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள், செப்புத்தகடுகளை நேரில் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள சத்யவாகீஸ்வர் கோவிலுக்குச் சென்ற அவர், அங்கு காணாமல் போன செப்புத்தகடு தொடர்பான தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.