மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
|மகாளய அமாவாசை தினத்தில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
சென்னை,
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகாளய அமாவாசை அக்டோபர் 2-ந் தேதி வருவதை முன்னிட்டு அக்டோபர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதாவது, தமிழகத்திலும் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் இருந்தும் பொது மக்கள் மகாளய அமாவாசை அன்று புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் வருகின்ற அக்டோபர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் மற்றும் அக்டோபர் 2-ந் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேற்கூறிய இடங்களில் இருந்து www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.