கல்லூரியின் கழிவறையில் பாம்புகள்: மாணவிகள் அலறியடித்து ஓட்டம்
|கல்லூரியின் கழிவறையில் பாம்புகள் இருந்ததை கண்டு மாணவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் காலை மதியம் என இரண்டு சிப்டாக சுமார் 8000 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் உள்ள பெண்கள் கழிப்பறை நீண்ட நாட்களாக பயன் பாடின்றி உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் அந்த கழிவறையில் சில மாணவிகள் சென்றுள்ளனர். அங்கு சென்ற போது ஒரு கழிவறையில் சாரை சாரையாக பாம்புகள் இருந்ததை கண்டு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். வந்து மற்ற மாணவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சில மாணவர்கள் பாம்புகள் இருந்ததை தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாம்பு பிடிக்கும் நபர்களை கொண்டு கழிவறையில் பாம்புகளை தேடியுள்ளனர்.
அப்போது சில பாம்புகள் மட்டும் பிடிபட்டதாகவும் மற்ற பாம்புகளை தேடி வருவதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். அரசு கல்லூரி பெண் கழிவறையில் சாரையாக பாம்புகள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.