< Back
மாநில செய்திகள்
திருச்சியில் ஜாபில் நிறுவனத்தின் தொழிற்சாலை:  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
மாநில செய்திகள்

திருச்சியில் ஜாபில் நிறுவனத்தின் தொழிற்சாலை: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

தினத்தந்தி
|
10 Sept 2024 7:55 AM IST

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சென்னை,

தமிழகத்திற்கு அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டில் அரசுமுறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின்போது முதல்-அமைச்சர் முன்னிலையில், தமிழக அரசுடன் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன. பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை முதல்-அமைச்சர் நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், ஆப்பிள், சிஸ்கோ, எச்.பி. நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜாபில் நிறுவனத்தின் தொழிற்சாலை திருச்சியில் அமைகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதைபோல காஞ்சிபுரத்தில் உள்ள ராக்வெல் ஆட்டோமேஷன் (Rockwell Automation)தனது தொழிற்சாலையை ரூ.666 கோடியில் விரிவாக்கம் செய்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் 365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜாபில் நிறுவனம்:-

ஜாபில் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் ஜாபில் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் மேட் கிரவுலி, முதுநிலை இயக்குநர் நித்து சின்கா மற்றும் பி.ஜெ. பேரன்காப் ஆகியோர் பங்கேற்றனர்.

ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம்:-

ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனமானது, தொழிற்துறை ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகம் அமெரிக்க நாட்டின் விஸ்கான்சின்னிலுள்ள மில்வாக்கியில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் பார்ச்சூன் 5,00 நிறுவனங்களில் ஒன்றாகும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 666 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் பிளேக் மோரெட் முதுநிலை துணைத் தலைவர் ராபர்ட் பட்டர்மோர், துணைத் தலைவர் எட்வர்ட் மோர்லான்டு, இயக்குநர் முத்துகுமரன் பிச்சை ஆகியோர் பங்கேற்றனர்.

ஆட்டோடெஸ்க் நிறுவனம்:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆட்டோடெஸ்க் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் ஆட்டோடெஸ்க் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ஜெப் கிண்டர், துணைத் தலைவர் கென் பூ ஆகியோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்