சாக்லேட் வாங்கித்தருவதாக அழைத்துச்சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
|சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து, பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியை சேர்ந்தவர் அப்துல்கனி (வயது 57), தொழிலாளி. இவர் கடந்த வருடம் விளையாடிக் கொண்டிருந்த தனது நண்பர் ஒருவரின் 7 வயது மகளிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார்.
அப்போது அவர் அந்த சிறுமியிடம் சாக்லேட் தருவதாக கூறி சைக்கிளில் மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து, பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பான வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று நீதிபதி சிவக்குமார் தீர்ப்பு வழங்கினார். அதில் அப்துல்கனிக்கு, சிறுமியை கடத்திச் சென்றதற்காக 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.10 ஆயிரமும், போக்சோ பிரிவின் கீழ் 20 ஆண்டுகளும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். சிறை தண்டனையை ஏக காலத்தில் (20 ஆண்டுகள்) ஆண்டுகள் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.