10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
|திருப்பூரில் 10 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூரில் வசி்க்கும் ஒரு தம்பதியின் 10 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அவளை மருத்துவர் பரிசோதித்த போது அவள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பெற்றோர் திருப்பூர் தெற்கு போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து போலீசார் கூறுகையில், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவர்கள் 2 பேர் திருப்பூரில் உள்ள அவரது உறவினர் வீட்டு விஷேசத்துக்கு வந்தனர். சம்பவத்தன்று அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை அழைத்துச் சென்று இருவரும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின்படி, ஏற்கனவே மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த முகமது தாளித் (வயது 55) என்ற சலவைத் தொழிலாளி அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் இச்சிறுமியை அழைத்துச் சென்று தனது வீட்டில் வைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து 3 பேர் மீதும் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பின்பு திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி விட்டனர். அங்கு போலீசார் 2 சிறுவர்கள் மற்றும் சலவைத்தொழிலாளி மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.