திருமணம் செய்வதாக கூறி பயிற்சி பெண் டாக்டரிடம் உல்லாசம்: டாக்டர் மீது வழக்குப்பதிவு
|என்னை ஏமாற்றிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயிற்சி பெண் டாக்டர் புகார் அளித்துள்ளார்.
கோவை,
கோவையை சேர்ந்த பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு ஆஸ்பத் திரியில் பயிற்சி டாக்டராக பணி யாற்றினேன். அங்கு டாக்டராக பணியாற்றிய ஷியாம் சுந்தர் (வயது 30) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். மேலும் அவர் என்னை அவரது காரில் ஊட்டியில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார்.
நாங்கள் இருவரும் காரிலேயே நெருக்கமாக இருந்தோம். எனது கணவராக வரப்போகிறவர் என்பதால் உல்லாசம் அனுபவிக்க நான் அனுமதித்தேன். பின்னர் அவர் கோவை வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு பணி மாறுதலாகி சென்றார். நானும் பயிற்சியை முடித்துக்கொண்டு கோவை திரும்பினேன்.
கோவை வந்ததும் ஷியாம் சுந்தர் அடிக்கடி என்னை காரில் வெளியே அழைத்து செல்வார். அவர், கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி கோவையில் ஒரு ஓட்டலில் கணவன்-மனைவி என்று பதிவேட்டில் பதிவு செய்து அறை எடுத்து என்னிடம் உல்லாசமாக இருந்தார். இதைத்தொடர்ந்து ஷியாம் சுந்தரிடம் எப்போது என்னை திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்றும், எனது வீட்டிற்கு வந்து பெண் கேளுங்கள் என்றும் கூறினேன்.
அதன் பிறகு அவர் என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். அதன்பிறகு தான் ஷியாம் சுந்தருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, ஒரு ஆண் குழந்தை இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் கடந்த மே மாதம் 18-ந் தேதி சுங்கத்தில் உள்ள ஷியாம் சுந்தர் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறினேன். அங்கு இருந்த ஷியாம் சுந்தரின் தாய், அக்கா, அவரது மாமா ஆகியோர் என்னை திட்டி அனுப்பி விட்டனர். திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்து என்னை ஏமாற்றிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டாக்டர் ஷியாம் சுந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
அதன் பேரில் கோவை அனைத்து மகளிர் போலீசார் ஷியாம் சுந்தர் மீது நம்பிக்கை மோசடி, பொதுஇடத்தில் ஆபாச செயல் புரிதல், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.