பாலியல் புகார் விவகாரம்: முன்னணி நடிகர், நடிகைகள் மவுனத்தை கலைக்க வேண்டும்: நடிகை ராதிகா
|தமிழ் திரையுலகில் பாலியல் புகார்களை விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என்று நடிகை ராதிகா கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
மலையாள திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த அறிக்கை குறித்து ஒவ்வொரு துறையிலும் இருந்தும் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் கேரவன்களில் ரகசிய கேமராக்கள் இருப்பதாக நடிகை ராதிகா சரத்குமார் ஒரு சில தினங்களுக்கு முன் பேட்டி கொடுத்திருந்தார். இதையடுத்து கேரவன் குறித்து ராதிகாவின் குற்றச்சாட்டிற்கு, கேரவன் உரிமையாளர் சங்கத்தின் தலைவர், தமிழ் சினிமாவில் அப்படி கேரவனில் ரகசிய கேமரா பொருத்தப்படுவது இல்லை எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ராதிகாவிடம் தொலைப்பேசி வாயிலாக அவர் கூறிய கேரவன் சம்பவம் குறித்து கேரள மாநில அரசு அமைத்திருந்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக முன்னணி நடிகர், நடிகைகள் மவுனத்தை கலைக்க வேண்டும் என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பாலியல் புகார் தொடர்பான விவகாரத்தில் முன்னணி நடிகர், நடிகைகளின் மவுனம் தவறாக தெரியும் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு ஆதரவுக் குரல் உறுதுணையாக இருக்கும். தவறு செய்தவர்களை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். தவறு செய்தால் தட்டிக் கேட்பேன். பாலியல் அத்துமீறல் நடந்ததாக என்னிடம் வந்து பல பெண்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஒரு சமயத்தில் பெரிய பிரச்சினை வந்தபோது நடிகை ஒருவரை காப்பாற்றினேன்.
ஆண்களின் மனநிலை கெட்டுப்போய் கொண்டு இருக்கிறது. இந்த கால ஆண்களின் மனநிலை மோசமாக உள்ளது. தவறுகள் நடக்கும் இடங்களில் தட்டிக் கேட்கிறோம், அதைக் கொண்டு வந்த ஊடகத்திலும், பொது இடங்களிலும் சொல்வதால் என்ன ஆகப்போகிறது.
தவறும் செய்யும் ஆண்களை இந்த சமூகம் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு கதை இருக்கிறது. சுனிதா வில்லியம்ஸ், கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் வளர்ந்து வரும் சமூகத்தில் எங்களை இன்னும் இது போன்ற விவகாரங்களைப் பற்றி பேச வைத்தது சமூகத்தின் தோல்வி என்றே சொல்வேன்
புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிற அளவில் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். துணை நடிகர்களை பாதுகாக்க வேண்டியது தயாரிப்பாளர் பொறுப்பு. படப்பிடிப்பு தளங்களில் ஏதாவது ஒரு தவறு நடந்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்.
5 வருடம் கழித்து சொல்றாங்க, 10 வருடம் கழித்து சொல்றாங்க உள்ளிட்டவை ஆண்கள் கேட்கும் பொதுப்படையான கேள்வி. ஒரு பெண்ணின் மனநிலை யாருக்கு தெரியும்.? அந்த 5 வருட காலங்களில் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார்கள், வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு இருப்பார்கள், குடும்பம், குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறைகளிலும் வேலை பார்க்கும் எல்லா பெண்களின் மனநிலைப் பற்றி சொல்கிறேன்
தமிழ் திரையுலகில் பெண்களை பாதுகாக்க வேண்டியது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருடைய பொறுப்பு. பெண்களுக்கென தனி கழிவறை , உடை மாற்றும் அறை உள்ளிட்டவை இருக்க வேண்டும். எங்கேயோ ஒரு இடத்தில் தவறுகள் நடக்கும். என்னுடைய வாழ்க்கையில் வந்த எல்லாப் பிரச்னைகளையும் நான் தனியாக நான் எதிர்கொண்டுள்ளேன்.
இப்போது வரை பெண்கள் போராடிதான் வருகிறோம். 80களில் இருந்து பார்க்கிறேன் எனக்கு தெரியும் தமிழ் திரையுலகிலும் இது போன்று இருக்கிறது. யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை.
கேரவன் விவகாரம் குறித்து விளக்கம்தான் சொன்னேன். புகார் தரவில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு எஸ்.ஐ.டி.,யில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டார்கள், அப்போது எஸ்.ஐ.டி.,யிடம் விளக்கத்தை மட்டும் அளித்தேன், நான் புகார் எதுவும் அளிக்கவில்லை. நான் புகார் அளித்திருந்தால் தான், என்னிடம் விசாரணை நடத்துவார்கள்.
தமிழ் திரையுலகிற்கும் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் ஆனால் தமிழ் திரையுலகில் இப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துவிட்டது. படித்த இளைஞர்கள் நிறைய பேர் வந்து விட்டார்கள் அதனால் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது.
தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லா நடிகர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் அரசியல் ஆசை இருக்கு. நீங்க மக்களுக்காக பேசபோறீங்களே, உங்க கூட இருக்கின்ற பெண்களுக்காக ஒரு வார்த்தை சொல்லுங்க.." என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.