செந்தில் பாலாஜி வழக்கு: சாட்சி விசாரணையை தொடரலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
|செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பு சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தது. இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி மனு மீதான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சாட்சி விசாரணை துவங்கியதாக அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் செந்தில் பாலாஜி தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 28ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.