100 மி.லி பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை? தமிழக அரசு பரிசீலனை
|100 மி லி பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை,
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து சுமார் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். இவர்கள் அனைவரும் ஏழை மக்கள். இவர்களால் அரசு விற்பனை செய்யும் மது பாட்டில்களை விலை கொடுத்து வாங்க முடியாததால்தான் இது போன்று விஷ சாராயங்களை குடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே தமிழக அரசும், குறைந்த விலையில் 'டெட்ரா பேக்' பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற குரல் எழுந்தது. ஆனால் அதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2001-ம் ஆண்டு இறுதியில் தமிழகத்தில் கள்ளச்சாராய சாவுகள் அரங்கேறியது. எனவே அப்போது 100 மில்லி லிட்டர் ரூ,15 என்ற 'மலிவு விலை மது விற்பனை' தொடங்கப்பட்டது. நாளடைவில் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இது போன்ற ஒரு திட்டத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று கோரிக்கை பெரிதாக எழுந்துள்ளது.
அதற்கிடையே தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சரின் விருப்பம். ஆனால் அதற்கான நிலை தற்போது இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி அறிவித்தார்.இது தொடர்பாக சட்டசபையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், 'நமது பக்கத்தில் இருக்கும் கேரளா, கர்நாடகம், ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெறும்போது, நாம் மட்டும் எப்படி பற்றி கொள்ளாத கற்பூரமாக இருக்க முடியும்' என்றார்.
எனவே தமிழகத்தில் மது விலக்கு இப்போது இல்லை என்ற நிலையைதான் தமிழக அரசு எடுத்து இருக்கிறது. எனவே ஏழை மக்கள் கள்ளச்சாராயம் வாங்குவதற்கு பதில் குறைந்த விலையில் மது வாங்குவதற்கு ஏற்ற வகையில் மலிவு விலை மது விற்பனையை தொடங்க தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. மது உற்பத்தி நிறுவனங்களை பொறுத்தவரை 'டெட்ரா பேக்' மூலம் மது தயாரிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த மாதக்கணக்கில் கால அவகாசம் தேவை என்று கூறுவதாக தெரிகிறது.
எனவே உடனடியாக அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் தமிழக அரசு 100 மி.லிட்டர் கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் மதுவிற்பனை செய்யலாமா? என்றும் பரிசீலித்தது. அதில் பிளாஸ்டிக் பாட்டில்தான் சிறந்தது என்று தெரியவந்தது. ஆனால் இந்த திட்டம் குறித்த பரிசீலனை ஆரம்பக்கட்டத்தில்தான் இருக்கின்றன. அரசு உரிய முடிவு எடுத்தவுடன்தான் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.