< Back
மாநில செய்திகள்
விதிகளுக்கு புறம்பாக கனிமவளங்களை எடுத்து செல்லும் வாகனங்கள் பறிமுதல்:  அதிகாரிகளுக்கு துரைமுருகன் உத்தரவு
மாநில செய்திகள்

விதிகளுக்கு புறம்பாக கனிமவளங்களை எடுத்து செல்லும் வாகனங்கள் பறிமுதல்: அதிகாரிகளுக்கு துரைமுருகன் உத்தரவு

தினத்தந்தி
|
20 July 2024 2:42 AM IST

சுரங்கம் மற்றும் குவாரி நடத்துபவர்களிடம் இருந்து நிலுவை தொகையை வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், கனிமவளத்துறையின் வருவாயை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சுரங்கம் மற்றும் குவாரி நடத்துபவர்களிடம் இருந்து நிலுவை தொகையை வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.

சுரங்கம் மற்றும் குவாரிகளில் விதி மீறல்களை ஆய்வு செய்து அபராதம் விதிப்பது குறித்தும், அண்டை மாநிலங்களுக்கு விதிகளுக்கு புறம்பாக கனிம வளங்களை எடுத்து செல்லும் வாகனங்களை கைப்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

மேலும், பதிவு செய்யப்படாமல் இயங்கும் செங்கல் சூளை, எம்.சாண்ட் மற்றும் கிரஷர் ஆலைகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும், பறக்கும் படைகள் மண்டலங்களில் திடீர் தணிக்கை மேற்கொண்டு கனிமங்கள் கள்ளத்தனமாக எடுத்து செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் (கூடுதல் பொறுப்பு) பணீந்திர ரெட்டி, கனிம வளத்துறை ஆணையர் சரவணவேல்ராஜ், மற்றும் கனிம வளத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்