சாம்சங் தொழிலாளர்கள் கைது: சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு
|சாம்சங் தொழிலாளர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை,
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் அமைந்துள்ள 'சாம்சங்' நிறுவன தொழிலாளர்கள் 1,200 பேர் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அமைப்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் சுங்குவார்சத்திரத்தில் 'சாம்சங்' நிறுவன அதிகாரிகள், தொழிலாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை தலைமைச்செயலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
முதலில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் இரவு வரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. சங்கம் அமைக்கும் கோரிக்கையை தவிர்த்து பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக ஆலை நிர்வாகம் வாக்குறுதி அளித்தது. அதன் அடிப்படையில், உடன்பாடு ஏற்பட்டதாக அரசு அறிவித்தது. இருப்பினும் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார், 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மேலும் போராட்டத் திடல்களில் இருந்த பந்தல்களையும் பிரித்தனர். பந்தல் அகற்றப்பட்ட நிலையிலும் அதே இடத்தில் அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் ஆலை தொழிலாளர்கள் உடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.
இந்த நிலையில், சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். சாம்சங் தொழிலாளர்கள் முறையீடு குறித்து இன்று பிற்பகலில் விசாரிப்பதாக ஐகோர்ட் நீதிபதிகள் பாலாஜி மற்றும் வேல்முருகன் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மனு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.